Thursday, March 3, 2011

கணிணி - காதலி

உன் முதல் பார்வையிலே
என்னை தொலைத்தேன்
உன்னை தழுவிட
நெஞ்சம் துடித்தேன்
கை விரல் விளையாட்டில்
என்னை மறந்தேன்
நான் எண்ணியதெல்லாம்
நீ எனக்களித்திட
உள்ளம் நெகிழ்ந்தேன்

நொடிகள் கடந்தன,
நாட்கள் கடந்தன
வருடம் கடந்தன
நானும் நீயும்
நம்முள் பிரியா உறவும்..

உன்னை பற்றியதில்
என்னை பற்றியது
செல்வம், ஆடை, ஆபரணம்
நிலம், மனை,
மற்றும் பற்பல பொருள்கள்

உன் மோகத்தில்,
மறந்தேன்..

என் கை விரல் பற்றி
நடை பழக்கிய என் தந்தையை!

தன் உடல் சுமை கூட தாளாத வயதில்
என் புத்தகச் சுமையை தான் சுமந்து
என்னை பள்ளிக்கு அழைத்து சென்ற தாத்தாவை!

ஓய்வில்லா கண்கள் ஓய்வுக்கு ஏங்கும் பொழுதும்
எனக்காய் ஒரு குட்டி கதை கூறி
அதில் ஓர் வழிகாட்டி, என்னை உறங்க வைத்த பின்
தான் உறங்கிய பாட்டியை!

பள்ளி பருவம் முதல்,
கல்லூரி பருவம் வரை
என்னுடன், என் கனவுடன், என் மகிழ்வுடன், என் சோர்வுடன்
கலந்து, பகிர்ந்து, என்னை தன் தோள் சாய்த்து, எனை உயர்த்திய
என் உயிர்த்தோழர்களை!

வெயிலிலும் மழை காட்டி
சுட்டெரிக்கும் நெருப்பிலும் குளிரூட்டி
என்னையே உரு மாற்றி,
என் உயர்வுக்கு வழி காட்டி
காதலில் கரைந்து
எனக்காய் புது உலகம் புதுப்பித்த
என் அங்கமாய் என்னுள் வசிக்கின்ற என் மனைவியை!

கண் விழித்த நாள் முதல்
எனக்களித்து, தான் உண்டு
என்னுடன் விளையாடி
என்னுடன் தான் பயின்று
இரவு பகல் பாராது
எனக்காய், எனக்கு மட்டுமாய்
உழைத்து, களைத்து, கரைந்து
இன்னும் எனக்காய் காத்திருந்து
மாறாத புன்னகையோடு
நள்ளிரவில் "சாப்பிட்டாயா கண்ணா?"
என நலம் விசாரிக்கும்
எனக்குயிர் அளித்த
என் அன்னையை!

இவை அனைத்தையும்
மறக்க செய்தாயே..

காதலியே - கணிணியே!!

உன் காதலால்
உயிரில்லா செல்வத்தை பெற்றெடுத்தேன்
பல உயிருள்ள நேசத்தின் மரணத்தில்!!!

 

No comments:

Post a Comment